கூடலூாில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் பாண்டியாறு நீரேற்று மையத்துக்குள் சகதி சேர்ந்ததால் மின் மோட்டார்கள் பழுதடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.;

Update: 2023-09-08 20:30 GMT

கூடலூர்

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் பாண்டியாறு நீரேற்று மையத்துக்குள் சகதிசேர்ந்ததால் மின் மோட்டார்கள் பழுதடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

மின் மோட்டார்கள் பழுது

கூடலூர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்யாமல் கடும் வெயில் அடித்தது. தற்போது தாமதமாக தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் திடீரென கனமழை பெய்தது.

இதைத்தொடர்ந்து பாடந்தொரை பகுதியில் சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதேபோல் கூடலூர் பாண்டியாற்றில் சேறும், சகதியுமான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது இரும்பு பாலம் பகுதியில் உள்ள நகராட்சி நீரேற்று மையத்துக்குள் சேறும், சகதியும் புகுந்தது. இதன் காரணமாக அதன் உள்ளே செயல்பட்டு வந்த மின்மோட்டார்கள் பழுதடைந்தது.

அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து கூடலூர் கோழிப்பாலம், பழைய நீதிமன்ற சாலை, மேல் கூடலூர், 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் பிரிவு ஊழியர்கள் பழுது அடைந்த மின் மோட்டார்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணியை கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், பொறியாளர் (பொறுப்பு) வசந்த், துணைத்தலைவர் சிவராஜ், பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பணியை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, குடிநீர் நீரேற்றும் மையத்துக்குள் சேறும், சகதியும் புகுந்து விட்டதால் சீரமைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்