குழாய் துண்டிப்பால் குடிநீர் வினியோகம் பாதிப்பு
தேனியில் ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணியின்போது குழாய் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.;
குடிநீர் குழாய் துண்டிப்பு
தேனி கே.ஆர்.ஆர். நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் கடந்து செல்வதற்காக குழாய் அமைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், அங்கு புதிதாக பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த வாரம் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதற்காக அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பாலம் அமைக்கும் பணியின் போது, அந்த வழியாக செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால், தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
குறிப்பாக கே.ஆர்.ஆர். நகர், சிவாஜி நகர், விஸ்வநாததாஸ் நகர் ஆகிய பகுதிகளுக்கு 2 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று குடிநீர் குழாய் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பிரதான மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட போது தற்காலிகமாக இணைக்கப்பட்ட குழாய் பிடுங்கிக் கொண்டது.
இதனால், குடிநீர் வீணாகியதோடு, மீண்டும் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் தற்காலிக குழாய் பொருத்தும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பாலம் அமைக்கும் பணியால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையே பாலம் அமைக்கும் பணி முடிந்து விடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அந்த பணி முடியவில்லை. துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.