திற்பரப்பில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
குமரியில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 75 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் ்திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்,
குமரியில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 75 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் ்திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதே போல நேற்று முன்தினமும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது.
மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மழை அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 75 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-
பூதப்பாண்டி-1.2, சிற்றார் 1-38.2, களியல்-20.5, கன்னிமார்-12.2, குழித்துறை-9.8, நாகர்கோவில்-1, பெருஞ்சாணி-8, புத்தன்அணை-6.4, சிற்றார் 2-23.6, சுருளகோடு-10.4, தக்கலை-9.3, பாலமோர்-16.2, மாம்பழத்துறையாறு-1, கோழிப்போர்விளை-14.6, அடையாமடை-2.2, முள்ளங்கினாவிளை-8.2, ஆனைகிடங்கு-18.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
அணைகளுக்கு தண்ணீர்
மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1674 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 973 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 147 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 70 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 588 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 350 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
திற்பரப்பு
மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய கோதையார், குற்றியார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் விடாமல் மழை பெய்தது. இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.
கோதையாற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் மீண்டும் திற்பரப்பு அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பரவலாக பாய்கிறது. கடந்த வாரத்தை விட தண்ணீர் அதிகமாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அணைக்கட்டில் அவர்கள் படகு சவாரியும் செய்தனர்.
-