முழுமையாக நெற்பயிர்கள் விளைய பெரியாறு பாசன கால்வாயில் அடுத்தமாதம் 20-ந்தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
முழுமையாக நெற்பயிர்கள் விளைந்திட அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
வாடிப்பட்டி,
முழுமையாக ெநய்பயிர்கள் விளைந்திட அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் வனிதா, மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெயரட்சகன் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி, வேளாண்மைதுறை, மின்வாரியம், பொதுப்பணித்துறை, ஊரக வளா்ச்சி துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வடகரைகண்மாய் பகுதியில் உள்ள விளைநிலங்களில் காட்டுப்பன்றிகளும், மற்ற இடங்களில் மயில்களும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே வனத்துறையினர் மயில், காட்டுபன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் முழுமையாக விளைய வருகிற மார்ச் 20-ந்தேதி வரை பெரியாறு பாசன கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். அனைத்து பகுதியிலும் தூர்ந்து போன ஷட்டர்களை சீரமைக்க வேண்டும். முறை பாசனத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும். யூனியன் அலுவலக சாலையில் பெரியாறு பாசன கால்வாய் கரையில் குவிந்திடும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
நடவடிக்கை
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட 19 சதவீத ஈரப்பதத்திற்கான அரசாணை விவரங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தென்கரை கண்மாயினை மீன்பிடிக்க திறப்பதனால் விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே கண்மாயை அடைக்க வேண்டும். கச்சைகட்டி பாலமேடு சாலை, வாடிப்பட்டி குலசேகரன்கோட்டை சாலைகளை சீரமைக்கவேண்டும். கட்டக்குளம் பிரிவில் தூர்ந்துபோன கால்வாய்களை சீரமைத்து முறையாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதித்து பேசினர். முன்னதாக நெற்பயிரை விவசாயிகள் எடுத்து வந்து கூட்டத்தில் காண்பித்து பயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முடிவில் தென்னை விவசாய சங்க தலைவர் சீத்தாராமன் நன்றி கூறினார்.