கன்னடியின் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்; விவசாயிகள் மனு

கன்னடியன் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.

Update: 2023-07-10 18:45 GMT

கன்னடியன் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கினர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் பகுதி முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், தலைவர் பாபநாசம் தலைமையில் மனு வழங்கினர். அதில், ''கன்னடியன் கால்வாய் பாசன பகுதியில் 12 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பு கொண்ட இருபோக சாகுபடி நிலங்கள் உள்ளன. இந்த பகுதி முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளது. இந்த பகுதி ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்படாததால் வறண்ட நிலையில் உள்ளது. அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் நலன் கருதி விவசாய பணிகளை மேற்கொள்ள பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் கொடுத்த மனுவில், ''பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. எனவே காமராஜருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வருகிற 15-ந்தேதி தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

மாஞ்சோலை தொழிலாளர்கள்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கொடுத்த மனுவில், ''கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக தாமிரபரணி ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு மாஞ்சாலை போராளிகள் நினைவு பாலம் என பெயரிட வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

பா.ஜனதாவினர் மாவட்ட துணைத்தலைவர் கார்த்திக் நாராயணன், பாளையங்கோட்டை மேற்கு தலைவர் பேராட்சி கண்ணன் ஆகியோர் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை தசரா மைதானத்தில் இருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி கோவிலுக்கு கூண்டு அமைத்துக் கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

''மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அ.சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும். கல்லூரிக்கு செல்கின்ற நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும்'' என்று கூறி மூலைக்கரைப்பட்டி பகுதி மாணவர்கள் மனு கொடுத்தனர்.

தர்ணா

மானூரைச் சேர்ந்த மாடத்தி என்ற மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரின் கார் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மெர்சி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், ''எனது நிலத்தை அரசியல் பிரமுகரின் மகன் உட்பட 3 பேர் பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறி எழுதி வாங்கிவிட்டனர். எனது நிலத்தை மீட்டு தர வேண்டும். இல்லையெனில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்'' என்று கூறினார். பின்னர் மாடத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்