பெருமாள்புரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; மேயரிடம், பொதுமக்கள் மனு

பெருமாள்புரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-07-11 20:50 GMT

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை டவுன் ரெங்கநாதபுரம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ரெங்கநாதபுரம் தெருவில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மழைநீர் கழிவுநீர் ஓடை ரெங்கநாதபுரம் தெருவுக்கு கிழக்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும் இரண்டு ஓடைகளாக பிரிந்து செல்கிறது. இந்த ஓடையில் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர், கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் சூழல் உள்ளது. எனவே கழிவுநீர் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பெருமாள்புரம் பகுதி மக்கள் 41-வது வார்டு கவுன்சிலர் சங்கீதாராதா சங்கர் தலைமையில் மேயரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "பெருமாள்புரம் 'சி' காலனியில் குடிநீர் தொட்டிக்கு அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் வருவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. மேலப்பாளையம் சந்தை, ஜின்னா திடல் போன்ற இடங்களில் வாழ்வு அட்ஜெஸ்ட் செய்வதால் தண்ணீர் முறையாக வருவதில்லை. எனவே பெருமாள்புரம் 'சி' காலனியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

கருங்குளம் அம்பேத்கர் தெரு மக்கள் சமுதாய நல கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்