கொட்டி தீர்த்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

Update: 2023-09-22 21:30 GMT

241 மி.மீ. மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. தென்மேற்கு பருவமழை காலத்திலும் வெயில் பாடாய்படுத்தியதால் மக்கள் வேதனை அடைந்தனர். இதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதில் வேடசந்தூரில் அதிகபட்சமாக 87 மி.மீ. மழை பெய்தது. இதேபோல் வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையத்தில் 71 மி.மீ., திண்டுக்கல்லில் 44.6 மி.மீ., கொடைக்கானல் ரோஸ்கார்டனில் 14 மி.மீ., பிரையண்ட் பூங்காவில் 12.4 மி.மீ., காமாட்சிபுரத்தில் 9.6 மி.மீ. பழனியில் 3 மி.மீ. மழை பதிவானது. இதன்மூலம் மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 241.6 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

இதற்கிடையே நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. ஆனால் மதியத்துக்கு பின்னர் கருமேக கூட்டங்கள் வானில் திரண்டு குடை பிடித்ததால், வெயில் மறைந்தது. இதை தொடர்ந்து மாலை 3.15 மணிக்கு திண்டுக்கல்லில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அதுவே சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதேபோல் சத்திரப்பட்டியில் ¾ மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால் திண்டுக்கல் நகர சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையால் தேங்கிய மழைநீர் வடியாத நிலையில் நேற்றும் மழை பெய்ததால் பல குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.

பழைய ஆர்.எம்.எஸ். சாலை, ஆர்.எம்.காலனி, பாறைக்குளம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழையால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்