நீர்வளம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

நீர்வளம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-02-04 18:45 GMT

நீரின்று அமையாது உலகு என்ற வாக்கிற்கு இணங்க விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புறங்களும், கிராமப்புறங்களும் குடிநீர் ஆதாரத்திற்கு பெரும்பாலும் நிலத்தடி நீர் ஆதாரங்களை நம்பியே உள்ளன. பெரும்பாலான பகுதிகளில் மானாவாரி விவசாயமே நடந்து வரும் நிலையில் பாசன வசதிக்கு கண்மாய்களையும், அணைக்கட்டுகளையும் நம்பி உள்ளது.

நிலத்தடி நீர்

கடந்த காலங்களில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு கிராம மக்கள் பஞ்சம் பிழைக்க கிராமங்களை விட்டு வெளியேறும் நிலையிருந்தது. மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் முற்றிலுமாக நிலத்தடி நீர் ஆதாரமே மக்கள் வாழ்க்கைக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

நீர்நிலைகள் மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் குண்டாற்றுபடுகையில் 117 கண்மாய்களும், வைப்பாற்று படுகையில் 225 கண்மாய்களும் என மொத்தம் 342 கண்மாய்கள் உள்ளன. இது தவிர ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 450 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள ஆயிரத்து 760 கிராமங்களில் 712 கண்மாய்கள் உள்ளன. மொத்தத்தில் 1054 கண்மாய்கள், 2925 ஊருணிகள் மற்றும் பண்ணை குட்டைகள் உள்ளன. இது தவிர ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, குல்லூர் சந்தை, கோள்வார்பட்டி, பிளவக்கல் பெரியார், கோவிலாறு, சாஸ்தா கோவில் ஆகிய அணைக்கட்டுகள் உள்ளன.

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

மேலும் கவுசிகமாநதி, வைப்பாறு, அர்ஜுனா நதி, குண்டாறு, கிருதுமால்நதி ஆகிய ஆறுகளும் உள்ளன. ஆனால் இதில் எந்த நதியும் வற்றாத ஜீவநதியாக இல்லை. மழைக்காலங்களில் மட்டுமே இந்த நதிகளில் தண்ணீரை காண முடியும். இல்லையேல் கழிவுநீர்தான் நதிகளில் ஓடும் நிலை உள்ளது. மாவட்டத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் கூட கண்மாய்கள் நிரம்பாத நிலையே உள்ளது. பல பருவ மழை காலங்களில் மழை வஞ்சித்துவிடும் நிலையே தொடர்கிறது. இதற்கு கண்மாய்களிலும், வரத்து கால்வாய்களிலும் கருவேலமர ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ள நிலையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அணைகளிலும் கூட நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இருக்கன்குடி, ஆனைக்குட்டம், கோல்வார்பட்டி ஆகிய அணை பகுதிகளில் கருவேல ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. ஆனைக்குட்டம் அணையை பொருத்தமட்டில் ஷட்டர் பழுதால் மழைக்காலங்களில் தேங்கும் நீர் கூட வெளியேறி விடுகிறது. பிளவக்கல் அணையில் இருந்து கீழே உள்ள கண்மாய்களுக்கான வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கண்மாய்களுக்கு நீர் வருவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

நிதி ஒதுக்கீடு

மத்திய அரசு மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்குவோம் என்று அறிவித்ததோடு மாவட்டத்தில் நீர் வளத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ஐந்தாண்டுகள் ஆனபோதிலும் இதுவரை நீர் வளத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் ஐரோப்பிய யூனியன் நிதி உதவியுடன் கண்மாய்கள் மராமத்து செய்யப்பட்டன. அந்த நிதி உதவி நிறுத்தப்பட்ட பின்பு கண்மாய்கள் மராமத்து செய்யப்படாத நிலையில் அனைத்து கண்மாய்களிலும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் குடி மராமத்து முறையில் மாவட்டத்தில் 65 கண்மாய்கள் மராமத்து செய்யப்பட்டன. அதன் பின்னர் கண்மாய்களின நிலையை கண்டு கொள்வார் யாருமில்லை. கண்மாய்களில் கருவேலமர ஆக்கிரமிப்பால் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுவதாக நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் கருவேலமர ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்களும் உத்தரவிட்டது. அவ்வாறு அகற்றப்படாவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமென நீதிமன்றம் எச்சரித்தது. ஆனாலும் இதுவரை கண்மாய்களில் கருவேலமர ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதிகாரிகள் பாராமுகம்

மேலும், விவசாய குறைதீர்க்கும் கூட்டத்திலும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பலமுறை முறையிட்டும், மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டும் அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர். இருக்கன்குடி மற்றும் ஆனைக்குட்டம் அணைகளில் இருந்து பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் கருதியும் சாகுபடி மூலம் நெல் சிறுதானியங்கள் மற்றும் வணிக பயிர்கள் மகசூல் அதிகரிக்கவும் நீர் வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கண்மாய்களை மராமத்து செய்ய பொதுநல அமைப்புகள், சேவை சங்கங்கள் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும். ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர் பழுதை நீக்கி தண்ணீரை தேக்கி வைக்கவும், இருக்கன்குடி அணையில் உள்ள கருவேலமரஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை தேக்கி வைக்கவும், விருதுநகரில் கவுசிகமா நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

துறைரீதியான நடவடிக்கை

நாராயணசாமி (மாநில தலைவர் தமிழ் விவசாயிகள் சங்கம்) கூறியதாவது:- கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். மேலும் கரைகளை பலப்படுத்த கண்மாய்களில் மேவி உள்ள மண்ணை அகற்றி விவசாயத்திற்கு பயன்படுத்திவிட்டு அடிமண்ணை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்தலாம். வரத்து கால்வாயில் தடுப்பணைகளை கட்டாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே கண்மாய்களுக்கு தண்ணீர் வர வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் கண்மாய்களின் நீர் பெருகி விவசாயம் செழிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

ஜெயக்குமார் (சமூக ஆர்வலர்):- வறண்ட இந்த மாவட்டத்தில் நீர்வளத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தாலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. குறைந்தபட்சம் கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலேயே கண்மாய்களில் நீர் பெருக வாய்ப்பு ஏற்படும். கிராம பகுதியில் உள்ள ஊருணிகள் மற்றும் பண்ணை குட்டைகளில் கிராம பஞ்சாயத்து நிர்வாகமே தூர்வாரி மராமத்து செய்தால் அதில் நீர் பெருக வாய்ப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மூலம் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்த வேண்டியது அவசியமாகும். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதும். அவசியமாகும்.

மராமத்து செய்ய வேண்டும்

வடிவேல் (சேவை சங்க நிர்வாகி):- மாவட்டத்தில் நீர் வளத்தை மேம்படுத்த பட்டு நிர்வாகத்துடன் சேவை சங்கங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளன. விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கண்மாயை தூர்வாருவதில் கிராமத்து இளைஞர்களுடன் சேவை சங்கங்களும் பங்கேற்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து சேவை சங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் கலந்தாய்வு செய்து நீர் நிலைகளை மராமத்து செய்ய நடவடிக்கை எடுத்தால் மாவட்டத்தில் நீர் வளம் மேம்படும்.

Tags:    

மேலும் செய்திகள்