மருதாநதி அணை வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறப்பு;

பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி அணையின் வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2022-09-05 19:47 GMT

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் 72 அடி உயரம் ெகாண்ட மருதாநதி அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக அணை தனது முழு கொள்ளளவான 72 அடியை எட்டி நிரம்பியது. அணைக்கு தற்போது வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையின் பிரதான வாய்க்கால் வழியாக வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மருதாநதி அணையில் பிரதான வாய்க்கால் தவிர, வடக்கு மற்றும் தெற்கு வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும் பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் 10 ஆண்டுகளாகவே வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதற்கிடையே கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கடந்த வாரம் சித்தரேவில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மருதாநதி அணை வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் தண்ணீர் விரைவில் திறந்துவிடப்படும் என கூறினார்.

இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் சிதிலமடைந்த வடக்கு, தெற்கு வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அணையில் இருந்து வடக்கு, தெற்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி, 2 வாய்க்கால்கள் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமன் தலைமை தாங்கி, வாய்க்கால்களில் தண்ணீரை திறந்து வைத்தார். இதில், மருதாநதி அணை உதவி பொறியாளர் கண்ணன், அய்யம்பாளையம் மின்வாரிய உதவி பொறியாளர் செல்லகாமாட்சி, திண்டுக்கல் ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், அய்யம்பாளையம் பேரூராட்சி தலைவர் ரேகா அய்யப்பன், துணைத்தலைவர் ஜீவானந்தம், அய்யம்பாளையம் நகர தி.மு.க. செயலாளர் தங்கராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

10 ஆண்டுகளுக்கு பின்பு மருதாநதி அணையின் வடக்கு, தெற்கு வாயக்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, பட்டிவீரன்பட்டி எம்.வாடிப்பட்டி, சித்தரேவு, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்