ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் இருந்து 5,400 கனஅடி நீர் வெளியேற்றம்-கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-29 17:43 GMT

ஊத்தங்கரை:

பாம்பாறு அணை

ஊத்தங்கரையை அடுத்துள்ள பாம்பாறு அணையின் உச்சநீர்மட்டம் 19.75 அடியாகும். இந்த அணை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிரம்பியது. இதன்காரணமாக கடந்த 3 மாதங்களாகவே அணைக்கு வரும் தண்ணீர், உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாறு மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது. அதன் உபரிநீர் தற்போது பாம்பாறு அணைக்கு வருகிறது.

5,400 கனஅடி நீர் வெளியேற்றம்

மேலும் பாம்பாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 400 கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் அணையில் இருந்து உபரிநீராக அப்படியே ெவளியேற்றப்படுகிறது.

இதனால் பாம்பாறு ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாம்பாறு அணை தண்ணீர் செல்லும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றில் இறங்கி செல்பி எடுப்பது போன்ற விபரீத செயல்களிலோ ஈடுபடக்கூடாது என்றும், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறும் பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர்ந்து 3 மாதத்திற்கு மேலாக பாம்பாறு அணை நிரம்பி உள்ள காரணத்தினால் ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம் பட்டி, பாவக்கல், நடுப்பட்டி, நாய்க்கனூர்,அத்திப்பாடி போன்ற ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்