நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை; வராகநதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. வராகநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. வராகநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிரம்பி வழியும் அணை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 121 அடியாக இருந்தது. மேலும் அணைக்கு நீர்வரத்து சீராக இருந்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனால் சோத்துப்பாறை அணை தனது முழு கொள்ளளவான 126.28 அடியை நேற்று எட்டியது. சிறிது நேரத்தில் அணை நிரம்பி பிரதான மதகு வழியாக தண்ணீர் வெளியேறியது.
வெள்ள அபாய எச்சரிக்கை
சோத்துப்பாறை அணையில் நிரம்பி வெளியேறும் தண்ணீர் அப்படியே வராகநதியில் ஓடுகிறது. இதையடுத்து பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பாயும் வராகநதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், சோத்துப்பாறை அணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. வரும் நாட்களில் மழை பெய்தால் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வராகநதி கரையோரம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
சோத்துப்பாறை அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.