பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

Update: 2022-05-31 19:29 GMT

குலசேகரம், 

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து விவசாயத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

பேச்சிப்பாறை அணை

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் ஆதாரமாக பேச்சிப்பாறை அணை உள்ளது. இந்த அணை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி விவசாயத்துக்காக திறக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவை நோக்கி உயர்ந்து வருகிறது. வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில், அணையில் இருந்து கடந்த மாதம் 21-ந் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாவட்டத்தில் முதல் பருவ சாகுபடியான கன்னிப்பூ சாகுபடிக்காக இன்று (புதன்கிழமை) காலை 11.15 மணிக்கு பேச்சிப்பாறை அணை திறக்கப்படுகிறது. அணையை கலெக்டர் அரவிந்த் திறந்து வைக்கிறார். இதுபோல், பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளும் விவசாயத்துக்காக திறக்கப்படுகிறது.

அரசு அறிவிப்பு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன திட்ட பகுதிக்கு ஜூன் 1-ந்தேதி (இன்று) முதல் 28.2.2023 வரை தினசரி 850 கனஅடி வீதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம் 79 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பேச்சிப்பாறை அணை திறக்கப்படவுள்ள நிலையில், இந்த அணையிலிருந்து உபரித் தண்ணீர் வெளியேற்றப்படுவது நேற்று மாலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்