பழனி பாலாறு-பொருந்தலாறு உள்பட 3 அணைகளில் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில், பழனி பாலாறு-பொருந்தலாறு உள்பட 3 அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2022-11-03 17:09 GMT

பாலாறு-பொருந்தலாறு

பழனி அருகே வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு உள்ளிட்ட அணைகள் உள்ளன. கொடைக்கானல் பகுதியில் மழை பெய்யும் போது இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் தற்போது அணைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் பாசனத்துக்காக வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு ஆகிய அணைகளில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் சசி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உதயக்குமார், உதவி பொறியாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அணையில் இருந்து 6 பழைய அணைக்கட்டு கால்வாய்களில் முறைப்பாசனத்துக்காக 120 நாட்களுக்கு 1,225 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் என்றும், இதன் மூலம் 6,168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரதமாநதி, குதிரையாறு அணைகள்

இதேபோல் வரதமாநதி அணையில் இருந்து பாப்பன் வாய்க்கால், பெரிய வாய்க்கால், பழனி வாய்க்கால் மற்றும் 18 குளங்களில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 5 ஆயிரத்து 523 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குதிரையாறு அணையில் இருந்து இடது பிரதான கால்வாய், வலசு பிரதான கால்வாய் மற்றும் பழைய பாசன பரப்புக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 231 ஏக்கர் நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 882 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்