5¼ லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

5¼ லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

Update: 2023-06-12 19:34 GMT

மேட்டூர் 

5¼ லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குறுவை சாகுபடி

தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ, பின்னரோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்து வருவதால் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு இந்த ஆண்டும் அறிவித்தது.

தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். நேற்று முன்தினம் சேலத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் மாலையில் சேலத்தில் இருந்து மேட்டூருக்கு புறப்பட்டு சென்றார். இரவில் அங்குள்ள நீர்வளத்துறை ஆய்வு மாளிகையில் தங்கினார்.

இந்நிலையில், நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காலை 10 மணிக்கு அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசை பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர் அணையின் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்களையும், நெல் உள்ளிட்ட தானியங்களையும் தூவினார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன் ஆகியோரும் தண்ணீரில் மலர்களை தூவி வணங்கினர்.

இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேட்டூர் அணையின் வரலாறு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளின் புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.

3-வது முறையாக...

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து 3-வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர் வெளியேற்றும் அளவு அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 867 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் பாசனத்துக்கு ஜூன் மாதம் இறுதி வரை தண்ணீர் திறக்கப்படும்.

அடுத்த மாதம் (ஜூலை) வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து படிப்படியாக வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாகவும் பாசன தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

5.26 லட்சம் ஏக்கர் பாசனம்

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 26 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை 5 லட்சத்து 26 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மேட்டூர் அணையில் இருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீரும், மீதமுள்ள 25.26 டி.எம்.சி தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.

இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் அந்த ஆண்டு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு 1947-ம் ஆண்டுக்கு பின் சுதந்திர இந்தியாவில் வழக்கமான தண்ணீர் திறக்கும் தேதிக்கு முன்பாக கடந்த ஆண்டு மே மாதம் 24-ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், தர்மபுரி செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், மேட்டூர் சதாசிவம், துணை மேயர் சாரதா தேவி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணி துறையின் மேட்டூர் நிர்வாக பொறியாளர் சிவகுமார், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், அணைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்