முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர்வு
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர்ந்துள்ளது.;
தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடியாக இருந்தாலும், 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கடந்த 18-ந்தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 132.50 அடியாக காணப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. அதன்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 135 அடியை எட்டியது. அணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,474 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாகவும் உள்ளது.