கோல்வார்பட்டி அணையில் தண்ணீர் கசிவு
சாத்தூர் அருகே கோல்வார்பட்டி அணையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதை உடனே சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே கோல்வார்பட்டி அணையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதை உடனே சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோல்வார்பட்டி அணை
சாத்தூர் அருேக கோல்வார்பட்டி அணைக்கட்டின் மொத்த கொள்ளளவு 16 அடி. இதில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையினால் 12 அடி அளவிற்கு நீர் பெருகி உள்ளது. மேலும் இந்த அணைக்கட்டில் 13 கண் மதகு பகுதிகள் உள்ளன. இதில் ஒரு கண் மதகு பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் முழு கொள்ளளவான 16 அடி தண்ணீர் தேக்கி வைக்கும் பட்சத்தில் 2,000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தலாம். மேலும் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இந்த அணைக்கட்டின் உட்பகுதியில் கருவேல மரங்கள் முளைத்து வேலிக்காடாக காட்சி அளிக்கிறது.
மதகில் இருந்து கசியும் தண்ணீர்
இந்தநிலையில் தற்போது பெருகி இருக்கும் தண்ணீரும் ஒரு மதகு வழியாக கசிவு ஏற்பட்டு வெளியேறி கொண்டு இருக்கிறது.
இதனால் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டு விடும் என விவசாயிகள் வேதனையுடன் கூறினர். இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் கசிவை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.