நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாகுபாடின்றி அகற்றப்படும்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எந்தவித பாகுபாடுமின்றி அகற்றப்படும் என குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.;

Update: 2023-02-24 19:03 GMT

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்வுகூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 64 விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கரும்பு வெட்டுக்கூலி

மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடன்களை புதுப்பித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப்பன்றி, குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பயிர்செய்ய முடியவில்லை. இதனால் குரங்குகளை பிடித்து சரணாலயம் அமைக்க வேண்டும். விவசாயம் செய்யாத தனிநபர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதால் விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை பேச முடியவில்லை. விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

பிரதமரின் பி.எம்.கிசான் உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை. இது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புகளுக்கு உரியவிலை கிடைப்பதில்லை. வெட்டுக்கூலி அதிகமாக ஆகிறது. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே வெட்டுக்கூலியை அரசே ஏற்க வேண்டும்.

நடவடிக்கை

ஆம்பூர் பகுதி பாலாற்றில் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை விடுவதால் அதன் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அணையின் மொத்த கொள்ளளவில் 116 ஏக்கர் மண்மேடாக உள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பதில் அளித்து பேசியதாவது:-

பாகுபாடின்றி

மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் எந்தவித பாகுபாடுமின்றி அகற்றப்படும். ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மாவட்டத்தில் 44 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். அவர்களில் 7 ஆயிரம் பேர் பதிவை புதுப்பிக்கவில்லை. இதனால் பி.எம்.கிஷான் உதவித்தொகை கிடைக்கவில்லை. அனைவரும், ஆதார் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க வேண்டும்.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே பேச வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். விவசாயிகள் அனைத்து அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 4 விவசாயிகளுக்கு என் பாலிசி, என் கை ஒப்புகை ஆணையை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் வேளாண் அலுவலர் அப்துல்ரகுமான், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் முருகேசன், துணை இயக்குநர்கள் ராமச்சந்திரன், பாத்திமா, வேளாண் பொறியில் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி இயக்குநர் அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்