நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2023-04-27 18:14 GMT

கால்வாய்களை தூர்வார வேண்டும்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன்:- மாவட்டத்தில் புதிதாக தைல மரக்கன்றுகள் பயிரிடுவதை தடுக்க வேண்டும். தைல மரக்காடு மற்றும் சீமைக்கருவேல மரங்களை முழுவதுமாக அகற்ற வேண்டும்.

கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை டி.ரமேஷ்:- வண்டல் மண் அள்ளுவதற்கு தாமதமின்றி அனுமதி அளிக்க வேண்டும். மேலும், நபருக்கு 4 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைனுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே கல்லணை கால்வாய் உள்பட அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும்.

உழவு மானியம் இல்லை

விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பவுன்ராஜ்:- தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை விவசாயத்துக்கும் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

தென்னை விவசாயிகள் நலச்சங்க தலைவர் செல்லதுரை:- ஆவுடையார்கோவில் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளது. இதனால் ஒரு ஆழ்குழாய் கிணறுகூட பாசனத்துக்காக இல்லை. ஆனாலும், நிலத்தடி நீர் அதிகமாக இருப்பதாக அலுவலர்கள் தவறான தகவலை தெரிவிப்பதால் நீர்நிலைகளை தூர்வாரமுடியாமல் போகிறது. அரசின் உழவு மானியம் வழங்குவதில்லை.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட பாசன விவசாயிகள் சங்க செயலாளர் மிசா.மாரிமுத்து:- காவிரி-குண்டாறு திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து, கால்வாய் வெட்டும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். கவிநாடு கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் பலர் பேசினர்.

உழவன் செயலி

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு பேசுகையில், விவசாயிகளுக்கு தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது யூரியா 3 ஆயிரத்து 600 மெ.டன்னும், டி.ஏ.பி. ஆயிரத்து 289 மெ.டன்னும், பொட்டாஷ் 405 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 822 மெ.டன்னும், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் 418 மெ.டன் யூரியா, 195 மெ.டன் டி.ஏ.பி., 199 மெ.டன் பொட்டாஷ், 548 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இருப்பு விவரம், மானியத் திட்டங்கள், மானிய முன்பதிவு, உதவி வேளாண்மை அலுவலர் வருகை குறித்த தகவல், வானிலை செய்திகள், பயிர் காப்பீட்டு விவரங்கள் உள்ளிட்ட 21 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்