மாற்றுப்பாதையை தண்ணீர் சூழ்ந்தது

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பூம்புகார் அருகே அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையை தண்ணீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-07-27 16:12 GMT
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே வானகிரி செல்லும் சாலையில் பழையகரம் என்ற இடத்தில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட நெடுஞ்சாலை துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வசதிக்காக அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை அடைந்து அங்கிருந்து காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் சூழ்ந்தது

இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீர் மேலையூர் அணையில் இருந்து நேற்று அதிகாலை கடலுக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் பூம்புகார் அருகே பழையகரம் மாற்று பாதையை சூழ்ந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், வானகிரி ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த வழியாக கனரக போக்குவரத்தை தடை செய்தனர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

கலெக்டர் நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியப் போக்கால் தான் மாற்றுப்பாதையை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்