குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2023-06-09 16:25 GMT


திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.தற்போதைய நிலையில் அணையின் நீர் இருப்பு மொத்தமுள்ள 60 அடியில் 25.03 அடியாகவே உள்ளது. அதிலும் பெரும்பகுதி சேறு நிறைந்ததாகவே இருக்கும். இதனால் அணையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களின் மூலம் சீரான குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. இந்தநிலையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குடிநீர்க் குழாய்களில் ஆங்காங்கே ஏற்படும் உடைப்புகளால் பெருமளவு வீணாவது தடுக்கப்படாமலேயே உள்ளது. இதனால் குடிநீர் வினியோகத்தில் குளறுபடிகள் ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காக அலைமோதும் நிலை ஏற்படுகிறது.

அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டி-துங்காவி இடையில் குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பிலிருந்து குடிநீர் வெளியேறி சாலையில் ஆறாக பாய்ந்து வீணாகிறது.எனவே குடிநீர்க் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து பகுதிகளிலிலும் குடிநீர்க் குழாய்களை ஆய்வு செய்யவும், குடிநீர்க் குழாய் உடைப்புகளை கண்டறியும் வகையிலும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ரோந்து செல்ல வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் குடிநீர் வினியோகம் தொடர்பான புகார்களை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் தனி வாட்ஸ்-ஆப் எண் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்