சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கறுப்பு நிறத்தில் வந்த தண்ணீர்- சாயக்கழிவு கலப்பதாக பொதுமக்கள் புகார்

சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கறுப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால், சாயக்கழிவு கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

Update: 2022-12-02 21:23 GMT

சென்னிமலை

சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கறுப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால், சாயக்கழிவு கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

கறுப்பு நிறத்தில் தண்ணீர்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். மேலும், வீட்டு உபயோகத்திற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் அந்தப் பகுதியில் மழை பெய்ததால் இவர் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஆழ்குழாய் கிணற்று மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்துள்ளார். அப்போது கறுப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து ஒரு மணி நேரம் மோட்டாரை இயக்கியும் தண்ணீர் கறுப்பு நிறமாகவே இருந்துள்ளது.

சுத்திகரிப்பு செய்யாமல்...

இதைத்தொடர்ந்து விவசாயி சீனிவாசன் மற்றும் அந்த பகுதியில் இருந்தவர்கள் கறுப்பு நிறத்தில் வந்த தண்ணீரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அந்த பகுதி வார்டு உறுப்பினர்கள் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து வெளியேறிய தண்ணீரை பார்த்து பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த பகுதியில் உள்ள ஏதாவது சாய தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் சாய கழிவுகளை வெளியேற்றியதால் அந்த சாய கழிவுகள் ஆழ்குழாய் கிணற்றில் கலந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்