மணிமுத்தாறு தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு

திருவாடானை யூனியன் கடம்பூர் கிராமத்தில் மணிமுத்தாறு தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-28 18:02 GMT

தொண்டி, 

திருவாடானை யூனியன் கடம்பூர் கிராமத்தில் மணிமுத்தாறு தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தரைப்பாலம்

திருவாடானை தாலுகா கடம்பூர் கிராமத்தில் உள்ள வடக்கு, தெற்கு குடியிருப்புகளுக்கு இடையே மணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் கடந்து செல்ல தரைப் பாலம் ஒன்று உள்ளது. இப்பாலம் முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில் தற்காலிக மாக மணல் மூடைகளை அடக்கி பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த தரைப்பாலத்தின் அருகில் இப்பகுதியில் உள்ள விசும்பூர், கூகுடி, நீர்க்குன்றம், வேலாவயல் சேந்தனி, அந்திவயல், அறநூற்றிவயல் தாதன்வயல் உள்ளிட்ட கிராமங் களுக்கு பாசன வசதிக்காக ஆற்றின் குறுக்கே ரூ.9 கோடி மதிப்பில் புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது. இங்கு தண்ணீரை தேக்கி இந்த பகுதியில் உள்ளகிராம கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளது.

தற்போது அணைக்கட்டு பணிகள் முடிந்த நிலையில் தொடர்ந்து இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் கடம்பூர் தரைப்பாலத்தில் சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால் பொது போக்குவரத்திற்கும் கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் போக்குவரத்திற்கும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை

எனவே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்க விடாமல் அணைக்கட்டு ஷட்டரை திறந்து விட சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ள சூழ்நிலையில் கடம்பூர் தரைப்பாலத்தை மேம்பாலமாக புதிதாக கட்டித் தர வேண்டும் என்றும் பொதுமக்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பொதுப்பணி துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கடம்பூர் முன்னாள் ஊராட்சி தலைவர் காசி ராமன் கூறியதாவது:-

கடம்பூர் மணிமுத்தாற்றில் மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் அதிகமாக செல்லும்போது போக்குவரத்து சில மாதங்களுக்கு முழுமையாக துண்டிக்கப்படுவது வழக்கம். எனவே மணிமுத்தாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். தொடர் மழைகாரணமாக தரைப்பாலத்தில் சுமார் 2 அடிஉயரத்திற்கு தண்ணீர் மேலே செல்கிறது. அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளதால் ஆற்றில் அதிக அளவு தண்ணீரை தேக்கும்போது தரைப்பாலம் முழுமையாக மூழ்கிவிடும். எனவே கடம்பூர் கிராமத்தில் மணிமுத்தாற்றின் குறுக்கே அரசு மேம்பாலம் உடனடியாக கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி பாப்பா கூறியதாவது:- கடம்பூர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மணிமுத்தாறு தரைப்பாலத்தின் மேலே தண்ணீர் செல்லும்போது 2 குடியிருப்பை சேர்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவது வழக்கம்.

பாலம் சேதம்

தேவகோட்டை வட்டானம் சாலையில் இருந்து குருந்தங்குடி கடம்பூர் வழியாக சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி செல்லக்கூடிய பிரதான சாலையாக இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பள்ளி கல்லூரி செல்லக்கூடிய மாணவ-மாணவிகள் பொதுமக்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பாலமும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. எனவே இந்தப் பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கடம்பூர் மணிமுத்தாற்றில் மேம்பாலம் கட்டித் தர வேண்டும்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முத்தமிழரசன் கூறியதாவது:- அணைக்கட்டு பணிகள் தற்போது தான் முடிவடைந்து உள்ளது. இன்னும் இதில் ஏராளமான பணிகள் செய்யப்பட வேண்டியது உள்ளது. அணைக்கட்டு ஷட்டர் திறக்கப்பட்டு லேசாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அணைக்கட்டில் உள்ள தடுப்பணை முன்பு பெரிய அளவில் பள்ளம் இருப்பதால் தண்ணீர் அதிலிருந்து வெளியேற முடியாத நிலையில் இருந்து வருகிறது. அதனால் தரைப்பாலத்தில் தண்ணீர் மேலே செல்கிறது.

நடவடிக்கை

தற்போது தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கடம்பூர் மணிமுத்தாறு குறுக்கே மேம்பாலம் கட்டுவது தொடர்பாக பொதுப்பணித்துறை மூலம் அரசுக்கு திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளது. அரசின் உரிய அனுமதி வந்தவுடன் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்