ஜல்ஜீவன் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயன் தரும் திட்டம்

ஜல் ஜீவன் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயன் தரும் திட்டம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-10-11 17:41 GMT


ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வீடு தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி ஆகியோர் இணைந்து இந்த திட்டத்தினை செயல்படுத்துகின்றனர்.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் அடங்கி உள்ள 445 கிராம ஊராட்சிகளில் இந்த குழுவினர் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி: சிவகங்கை மாவட்டத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 507 குடியிருப்புகள் உள்ளன. மாவட்டத்தில் இந்த திட்டம் கடந்த 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக காளையார் கோவில், இளையான்குடி, எஸ்.புதூர், தேவகோட்டை, கல்லல், திருப்பத்தூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 35 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.5 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது, இதில் 4,300 வீடுகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் 6,065 குடிநீர் குழாய் இணைப்புகள் முறைப் படுத்தப்பட்டு உள்ளது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 997 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 2022- 23-ம் ஆண்டில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 69 ஆயிரத்து 122 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 1 லட்சத்து 44 ஆயிரத்து 388 வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வீடுகளுக்கும் 2024 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு

ஜல்ஜீவன் திட்டம் தொடர்பான இந்திய அளவிலான ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டம், டெல்லியில் நடைபெற்ற குடிநீர், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து தேசிய அளவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து கூறியதாவது: ஜல் ஜீவன் மிஷின் திட்டம் சிறப்பு வாய்ந்தது. இந்த திட்டத்தினால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடிநீர் இணைப்பை பெற்றுள்ளனர். இந்த ஊராட்சியில் 468 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதில் இதுவரை 117 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்றார். சிவகங்கை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முனியம்மாள்: கடந்த 4 வருடத்திற்கு முன்பு நடைபெற்ற விபத்தில் எனது 2 கால்களும் பாதிக்கப்பட்டு சரிவர நடக்க முடியாத நிலை உள்ளது. வீட்டிற்கு தேவையான குடிநீரை அந்த வீதியில் உள்ள பொதுக்குழாயில் இருந்து தான் பிடித்து வந்தேன். அப்போது தண்ணீர் பிடிக்க சிரமமாக இருக்கும்.

இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஜல் ஜீவன் திட்டத்தில் என் வீட்டிலேயே குடிநீர் குழாய் அமைத்துக் கொடுத்தனர். இந்த திட்டம் பயனுள்ள திட்டம். கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள், நகர்புறங்களைபோல வீட்டிலேயே குடிநீர் பெற்றுக்கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்