குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
உடுமலை அருகே உள்ள வாகத்தொழுவு ஊராட்சி வா.வேலூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை அருகே உள்ள வாகத்தொழுவு ஊராட்சி வா.வேலூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் திருமூர்த்தி கூட்டு குடிநீர்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. இந்த கிராமங்களுக்கு குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டயம்பாளையம், இலுப்பநகரம், சுங்காரமடக்கு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் நீருந்து நிலையங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் கடைமடை பகுதியாக வாகத்தொழுவு, வீதம்பட்டி ஊராட்சிகள் உள்ளன.
வாகத்தொழுவு ஊராட்சியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வாகத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட வா.வேலூர் கிராமத்திற்கு திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கடந்த சில தினங்களாக குடிநீர் வரவில்லை என்றும் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இக்கிராமத்திற்கு வரவேண்டிய தண்ணீர் குறைந்த அளவே வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி கிராம மக்கள் நேற்று வா.வேலூர் பஸ் நிறுத்தம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாதிக்பாட்ஷா குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் சின்னச்சாமி மற்றும் குடிமங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் கடந்த இரண்டு நாட்களாக மின்தடை காரணமாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை என்றும் குடிநீர் வினியோகம் சீராக நடைபெற உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்ற பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.