லெசிஸ் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்

முல்லை பெரியாறு பாசன திட்டத்தில் லெசிஸ் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-09-23 18:45 GMT

முல்லை பெரியாறு பாசன திட்டத்தில் லெசிஸ் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயி ராஜா பேசியதாவது:- கோவில் நிலங்களை தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யாசாமி:- தற்போது வைகை ஆற்றில் வந்த அனைத்து தண்ணீரும் கண்மாய்க்கு செல்லாமல் கடலில் வீணாக கலந்தது. தண்ணீர் வந்தும் 13 கண்மாய்கள் நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

தண்டியப்பன்:- சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் இருப்பு இல்லை. அனைத்து சொசைட்டிகளிலும் யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யாசாமி:- சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் தரை தளம் அமைக்க வேண்டும்.

தண்ணீர் திறக்க வேண்டும்

ராஜேந்திரன்:- சாலிகிராமத்தில் உள்ள ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வேண்டும். முத்துராமலிங்கம்:- திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு, கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். ஆபிரகாம்:- சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 3,000 பேர் உள்ளனர். அவர்களுக்கு விரைவாக சான்றிதழ் வழங்க வேண்டும்.

கோபால்:- ஆதி திராவிட மக்களுக்கு அரசு வழங்கும் சலுகையில் ஈமச்சடங்கு நிதியாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. இந்த தொகையை உரிய காலத்தில் வழங்குவதில்லை. எனவே இதை உரிய காலத்தில் வழங்க வேண்டும். ராமலிங்கம்:- முல்லை பெரியாறு பாசன திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள லெசிஸ் கால்வாயை தவிர மற்ற மூன்று கால்வாய்களிலும் கடந்த 10-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, லெசிஸ் கால்வாய்க்கு தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

சூப்பர் பாஸ்பேட் உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உரத்தை விற்பதற்கான அனுமதி தங்களுக்கு இல்லை என்று சொசைட்டிகள் கூறுகின்றனர். எனவே அதற்கான உத்தரவை வழங்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது. விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் பதிலளித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வேளாண்மை துறை இணை இயக்குனர் தனபாலன், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் ஜினு, கால்நடைத்துறை இணை இயக்குனர் நாகநாதன், கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை) மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்