ஊருணிகளுக்கு வைகை தண்ணீர் திறப்பு

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து நகரில் உள்ள ஊருணிகளுக்கு வைகை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

Update: 2022-08-28 17:13 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து நகரில் உள்ள ஊருணிகளுக்கு வைகை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

உபரிநீர்

வைகை அணை நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கணக்கில் இருந்து கடந்த 8-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை ஆயிரத்து 148 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீர் வைகை ஆற்றில் ஓடி வந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்து உள்ளது. தற்போதைய நிலையில் 618 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 328 மில்லியன் கனஅடி தண்ணீர் சேர்ந்து உள்ளது.

தேவையான அளவு தண்ணீர் சேர்ந்து உள்ளதாலும், தற்போது மேலும் ராமநாதபுரம் கணக்கில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதாலும், வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதாலும் நகரின் நிலத்தடி நீர் ஆதாரத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

தண்ணீர் திறப்பு

இதற்காக பெரிய கண்மாயில் தேக்கப்பட்டுள்ள வைகை தண்ணீரை நகரின் தேவைக்காக ஊருணிகளில் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நேற்று காலை ராமநாதபுரம் பெரிய கண்மாயின் 6-வது மடை அமைந்துள்ள காவனூர் முதுனாள் பகுதியில் இருந்து ஊருணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டனர். இதில் தாசில்தார் முருகேசன், நகராட்சி துணைத்தலைவர் பிரவீன்தங்கம், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். விநாடிக்கு 20 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ள இந்த தண்ணீர் நொச்சிவயல், மானாங்குண்டு ஊருணிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதன் தொடர்ச்சியாக பெரிய கண்மாயின் 5-வது மடை பகுதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இந்த தண்ணீர் முகவை ஊருணி, நீலகண்டி ஊருணி, சிதம்பரம் பிள்ளை ஊருணி, லெட்சுமிபுரம் ஊருணிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதுதவிர, பம்பிங் முறையில் மோட்டார்கள் வைத்து சாயக்கார ஊருணி, செம்மண்குண்டு ஊருணி, கிடாவெட்டி ஊருணிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இவ்வாறு நகரில் உள்ள ஏறத்தாழ 13 ஊருணிகளுக்கு வைகை தண்ணீரை கொண்டு சேர்த்து நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க திட்டமிட்டு உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்