ஆகாயத்தாமரைகளால் கடைமடை பாசனத்தில் சிக்கல்

சோழமாதேவி பழைய வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-09-10 10:26 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பழைய வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடைமடை

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதிகளின் முக்கிய பாசன ஆதாரமாக அமராவதி அணை உள்ளது.அமராவதி அணையிலிருந்து ஆறு, பிரதான கால்வாய் மற்றும் ராஜவாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது ஆற்றுப் பாசனத்துக்கு அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பாசன வாய்க்கால்கள் மூலம் விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தநிலையில் சோழமாதேவி பழைய வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாயத்தாமரையை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படாததால் விவசாயிகள் நேரடியாக களமிறங்கியுள்ளனர்.

நெல் சாகுபடி

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சோழமாதேவி பழைய வாய்க்கால் மூலம் 700 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறுகிறது.தற்போது இந்த பாசன நிலங்களில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் வாய்க்காலில் அதிக அளவில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் பாசன நீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.அத்துடன் ஆகாயத்தாமரைகள் பெருமளவு நீரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடைமடையிலுள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளது.போதிய நீர் கிடைக்காமல் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்து ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது விவசாயிகள் ஒன்றிணைந்து கூலித்தொழிலாளர்கள் உதவியுடன் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.தற்போதைய நிலையில் விவசாயிகளின் சிரமங்களை உணர்ந்து அரசும் அதிகாரிகளும் பக்க பலமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்