சேதமடைந்த தடுப்பணையால் வீணாகும் தண்ணீர்
பழனி அருகே சேதமடைந்த தடுப்பணையால் தண்ணீர் வீணாகி செல்கிறது.
பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வரத்தாகிறது. இந்த அணைகளில் இருந்து ஓடை, கால்வாய் வழியே குளங்களுக்கு தண்ணீர் சென்று விவசாயம் நடக்கிறது. இதேபோல் ஓடை அருகே உள்ள நிலங்களும் பயன்பெறும் வகையில் ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.
அந்தவகையில் ஆயக்குடி குளத்திலிருந்து எரமநாயக்கன்பட்டி குளத்துக்கு தண்ணீர் வரும் ஓடையில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. மழை காலத்தில் இந்த ஓடையில் வரும் தண்ணீர் தடுப்பணை பகுதியில் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இதைக்கொண்டு விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் பருத்தி, கொய்யா, தென்னை விவசாயம் செய்கின்றனர்.
இந்நிலையில் கணக்கன்பட்டி பகுதி ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் பெரும்பாலானவை சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தேங்காமல் ஓடையில் வீணாகி சென்றுவிடுகிறது. இதனால் ஓடை கரையோர பகுதி விளைநிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கணக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் சேதமடைந்து உள்ளன. எனவே சேதமான தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.