வேப்பூர் அருகே ரத்தக்காயங்களுடன் விவசாயி பிணம் கொலையா? போலீசார் விசாரணை

வேப்பூர் அருகே ரத்தக்காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-26 18:45 GMT

வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் ரமேஷ் வயது (38). விவசாயி. இவருடைய மனைவி ராதிகா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராதிகா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவருடைய 2 மகன்களும் அதே பகுதியில் உள்ள ராதிகாவின் தந்தை வீட்டில் வசித்து வருகின்றனர். ரமேஷ், வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ரமேசின் வீட்டின் முன்பு ரத்தக்கரைகள் இருந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, தலையில் ரத்தக்காயங்களுடன் ரமேஷ் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கொலையா?

அதன்பேரில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேசின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் சாவிற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதையடுத்து ரமேசின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்