மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Update: 2023-09-06 20:55 GMT

மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணை

கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதியளவு பெய்யவில்லை. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில் சுப்ரீம் கோா்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழக்கமாக திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை கூட அந்த மாநில அரசு திறந்து விடவில்லை.

இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் கேட்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் கர்நாடக மாநிலத்தில் இருந்து குறைந்த அளவே காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 428 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 535 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டமும் 47.33 அடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டமும் சரிவை சந்தித்து வருகிறது.

தண்ணீர் திறப்பு குறைப்பு

அணையின் நீர் இருப்பு கணிசமாக குறைந்ததை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பானது வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தற்போது தண்ணீர் திறப்பு குறைப்பு உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாது.

இருப்பினும் நெல்பயிர்களுக்கு தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்