விடுதலை போரில் பங்கேற்ற வீரர்களை கண்டறிந்து போற்ற வேண்டும்

விடுதலை போரில் பங்கேற்று அறியப்படாத வீரர்களை நாம் கண்டறிந்து அவர்களையும் போற்ற வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கேட்டு கொண்டுள்ளார்.

Update: 2022-08-12 17:36 GMT

விடுதலை போரில் பங்கேற்று அறியப்படாத வீரர்களை நாம் கண்டறிந்து அவர்களையும் போற்ற வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கேட்டு கொண்டுள்ளார்.

அமுத பெருவிழா

தர்மபுரி மாவட்டம் ஏர்ரப்பட்டியில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா மற்றும் இல்லம் தோறும் தேசிய கொடி வழங்கும் விழா, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று அறியப்படாத வீரர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சுதந்திர தினமான நாளை மறுநாள் வரை தேசிய கொடியை பறக்கவிட வேண்டும். இந்த நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அரியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை கண்டறிந்து அவர்களையும் போற்ற வேண்டும். நாம் பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பதுடன், நமது நாட்டின் அறிவு சார்ந்த வளர்ச்சிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

இந்த நிகழ்ச்சியில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சாந்தி பரிசுகளை வழங்கினார். இதை தொடர்ந்து சுதந்திர தின பவள விழா விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவிகள் தேசிய கொடியை ஏந்தியவாறு கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வீடுகள் தோறும் தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ஜான்சிராணி, கள விளம்பர அலுவலர் பிபின்நாத், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுரம்மாள், பொன்னரசு, கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்