சரக்கு வாகனங்களை நிறுத்த தனி இட வசதி வேண்டும்
தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றி செல்ல கொண்டுவரப்படும் சரக்கு வாகனங்களை நிறுத்த வசதியாக மேற்ககூறையுடன் கூடிய வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம்;
தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றி செல்ல கொண்டுவரப்படும் சரக்கு வாகனங்களை நிறுத்த வசதியாக மேற்ககூறையுடன் கூடிய வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடகை வாகனங்கள்
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த காய்கறி மார்க்கெட்டில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான காய்கறி வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி சென்று தங்களது பகுதியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மொத்தமாக காய்கறிகளை வாங்கி தங்களது பகுதிக்கு எடுத்து செல்ல சிறிய ரக சரக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து வருவது வழக்கம்.
போக்குவரத்து நெரிசல்
இவ்வாறு கொண்டு வரப்படும் சரக்கு வாகனங்கள் காய்கறி மார்க்கெட் முன்புள்ள பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுவதால் தினமும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் மழைக்காலங்களில் வாகனங்களை நிறுத்த முடியாமல் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் சரக்கு வாகனங்களில் வரும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை கொள்முதல் செய்யும் வரை டிரைவர்கள் தங்களது சரக்கு வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு அதிலேயே காத்திருக்கிறார்கள்.வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மார்க்கெட் வளாகத்துக்கு முன்பு நிறுத்தி வைக்கப்படுவதால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பெரிய சரக்கு வாகனங்களை மார்க்கெட் வளகத்துக்குள் கொண்டு செல்ல முடியாமல் லாரி ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர்.
மழைக்காலம்
குறிப்பாக மழைக்காலத்தி்ன் போது வாகனங்கள் மழையில் நனைவதோடு வாகன ஓட்டிகள் ஓய்வெடுக்க உரிய இடவசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாக வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே தாராசுரம் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு வரும் சரக்கு வாகனங்களை நிறுத்துவதற்கு மேற்கூறையுடன் கூடிய வாகன நிறுத்தும் இடம் அமைத்து அங்கு கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடு்த்துள்ளனர்.