திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-02 12:11 GMT

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரெயில் மோதி...

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரெயில் மூலம் சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. நேற்று அதிகாலையில் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு ரெயில் நெல்லை நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் தூத்துக்குடி 3-வது மைல் அருகே வந்த போது, ரெயில் முன்பு பாய்ந்த ஒருவர் ரெயிலில் அடிபட்டு தண்டவாளத்தின் ஓரத்தில் விழுந்து உள்ளார். இதனை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் மீளவிட்டான் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அதன்பேரில் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

சாவு

அப்போது, ஒரு வாலிபர் வலது கை துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனடியாக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர், தூத்துக்குடி சக்திநகர் 3-வது தெருவை சேர்ந்த நாகேந்திரன் மகன் வேல்முருகன் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் மீது தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம், சிப்காட், முத்தையாபுரம் போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. மேலும் இவர் கடந்த ஓராண்டாக நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதில் மனம் உடைந்த வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

திருட்டு வழக்கு

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முன்தினம் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1-வது தெருவில் ராமசாமி (40) என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வேல்முருகன், அவரது நண்பர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த கபில்தேவ் (22) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஒரு ஆட்டை திருட முயன்று உள்ளனர். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் 2 பேரையும் விரட்டி உள்ளனர். இதில் கபில்தேவ் சிக்கிக் கொண்டார். வேல்முருகன் அங்கிருந்து வேகமாக ஓடி தப்பி சென்று விட்டாராம். அங்கிருந்து சென்ற வேல்முருகன் செல்சினி காலனியில் உள்ள கவிதா என்பவர் வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிக் கொண்டு சென்று விட்டாராம். இது தொடர்பாக ராமசாமி, கவிதா ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்து வேல்முருகனை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்