இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டும்பழங்குடியின மக்கள் கோரிக்கை

இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டும் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-07-18 18:45 GMT


விழுப்புரம், ஜூலை.19-

விழுப்புரம் அருகே மிட்டாமண்டகப்பட்டை சேர்ந்த பழங்குடியின மக்கள், பழங்குடியின செயல்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் தலைமையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மிட்டாமண்டகப்பட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றோம். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு சொந்தமாக இடமோ, வீடோ எதுவுமே இல்லை. எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பல ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகின்றோம். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அம்மனுவில் கூறியிருந்தனர்.

இதேபோல் செஞ்சி அருகே களையூரை சேர்ந்தவர்கள், மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அம்மனுவில், நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக இக்கிராமத்தில் வசித்து வருகிறோம். சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் சொந்தமாக குடியிருக்க இடமில்லாத நிலையில் அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டுமனைகளாக பிரித்து வழங்கக்கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அரசியல்வாதிகள் சிலர், அரசு புறம்போக்கு இடத்தை முறைகேடாக பட்டா போட முயற்சித்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர், இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து வீட்டுமனை இல்லாத ஏழை, எளியவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென அம்மனுவில் கூறியிருந்தனர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்