நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட 21 பேருக்கு வாக்கி டாக்கி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, மருத்துவம், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட 21 பேருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா வாக்கி டாக்கி வழங்கினார்.

Update: 2022-09-19 19:01 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, மருத்துவம், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட 21 பேருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா வாக்கி டாக்கி வழங்கினார்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

அப்போது வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து 377 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

2-வது இடம்

அப்போது கலெக்டர் பேசுகையில் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 2,375 மனுக்கள் நிலுவையில் உள்ளது. இதற்கு வருகிற 30-ந் தேதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நமது மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. இதனை முதல் இடத்திற்கு கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

அதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் என 21 பேருக்கு வாக்கி டாக்கிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 3 துப்புரவு பணியாளர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகள், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணியியில் சிறப்பாக செயல்பட்ட 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கி பேசினார்.

அப்போது மாவட்டத்தில் 21 பேருக்கு வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் புகார்கள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும், பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணலாம் என கூறினார்.

தர்ணா போராட்டம்

ரெட்டிவலசை கிராமத்தில் உள்ள 400 வீடுகளுக்கு பட்டா வழங்க கோரியும், போலி பட்டா தயாரித்து வழங்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், போலி பட்டாவை ரத்து செய்யக் கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சென்று மனுக்களை கலெக்டரிடம் கொடுக்க கூறி சமாதானம் செய்தனர்.

ஆக்கிரமிப்பு

விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மனு அளித்தனர். அதில் கோட்டை பிரம்மேஸ்வரர் கோவில் மற்றும் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து பலர் வீடு கட்டி உள்ளனர்.

இதனால் விழாகாலங்களில் இடையூறாக உள்ளது. இதுகுறித்து பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

அப்போது கலெக்டர் முதலில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்து வருகிறது.

அந்த பணி முடிந்தவுடன் ஆக்கிரமிப்புகள் எடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதற்கு விஜயபாரத மக்கள் கட்சியினர் இதுகுறித்து ஒரு தேதி நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு விஜய பாரத மக்கள் கட்சியினர் வெளியில் அழைத்து சென்றனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துனை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர் (கலால்) பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்