வாக்கி டாக்கி ஊழல் வழக்கு - ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு

வாக்கி டாக்கி ஊழல் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-06-27 13:56 GMT

மதுரை,

மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடைபெற்ற ஊழலை உடனடியாக விசாரணை செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை, இதே புகாருடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் எத்தனை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன? பெறப்பட்ட மனுக்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்லை தாண்டும் மீனவர்களின் நலனை பாதுகாப்பதற்காக, அதிநவீன வசதி கொண்ட வாக்கி டாக்கி வழங்க முடிவு செய்யப்பட்டு 57 கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டது. இதன்படி 3 டவர்கள் அமைக்கப்பட்டு 3,100 வாக்கி டாக்கிகள் வழங்க திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இதே திட்டம் 7 கோடி ரூபாய் செலவில் 2008-ம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது. மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

லஞ்சம் மற்றும் ஊழல் துறை அதிகாரிகள் தரப்பில், இதே புகார்கள் நிறைய பெறப்பட்டுள்ளன. விசாரணை நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இதே புகாருடன் எத்தனை மனுக்களை பெற்றிருக்கிறீர்கள்? பெறப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு ஜூலை 6-ந்தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்