காத்திருப்போர் அறைகள் காற்று வாங்குகின்றன

காத்திருப்போர் அறைகள் காற்று வாங்குகின்றன

Update: 2022-09-22 22:51 GMT

பஸ் நிலையங்கள்

நாகர்கோவில் மாநகராட்சியில் இரு பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுபோக குமரி மாவட்டத்திற்குள்ளும் சில பஸ்கள் அங்கிருந்து செல்கிறது.

அண்ணா பஸ் நிலையத்தில் முழுக்க, முழுக்க குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த 2 பஸ் நிலையங்களிலும் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் சொல்லவே வேண்டாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகத்துக்கு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புபவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பஸ் நிலையங்களில் குவிவார்கள். இதனால் அந்த சமயத்தில் கூட்டம் அலைமோதும். பரபரப்பாகவும் இயங்கும். அதே சமயத்தில் கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் வெகுநேரம் அங்கு காத்திருந்து செல்லும் நிலையும் இருந்தது.

பயணிகள் காத்திருப்பு அறை

எனவே பயணிகளின் நலன் கருதி பஸ் நிலையத்தில் பல்வேறு இடங்களில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. அதோடு மட்டும் அல்லாது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பயணிகள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பஸ் நிலையங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய விஜயகுமார் எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை கட்டப்பட்டது.

ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் வடசேரி பஸ் நிலையத்திலும், ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் அண்ணா பஸ் நிலையத்திலும் இந்த கண்கவர் அறைகள் உருவாக்கப்பட்டன.

அந்த அறையில் இருக்கைகளுடன் சேர்த்து குளிர்சாதன வசதி மற்றும் மின்விசிறி வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அறையில் 30 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் அமரும் வகையில் இருக்கைகளும், அண்ணா பஸ் நிலையத்தில் 15 ஆண்கள், 15 பெண்கள் அமரும் வகையிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த காத்திருப்பு அறை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பஸ்சுக்காக காத்திருக்கும் அனைவருமே குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைக்கு சென்று ஓய்வு எடுத்து வந்தனர்.

தடுப்பூசி முகாம்

இந்தநிலையில் கொரோனாவுக்கு பிறகு வடசேரி பஸ்நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை செயல்படாமல் காட்சி பொருளாக மாறியது. அங்கு அமைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டியும் செயல்படவில்லை. மின்விசிறியும் இயங்கவில்லை. இதன் காரணமாக தற்போது அந்த அறைக்குள் சென்றாலே வெப்பமயமாக உள்ளது. இதனால் காத்திருப்பு அறைக்குள் எந்த பயணிகளும் செல்வது இல்லை. மேலும் சில இருக்கை–களும் உடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

அதே சமயம் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை செயல்படவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காத்திருப்பு அறை இருப்பதை பயணிகள் மறந்து விட்டார்கள். கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் போது அங்கு செவிலியர்கள் அமர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முறையாக பராமரிக்காததால் பயணிகள் காத்திருப்பு அறை பொலிவிழந்தும், குளிர்சாதன வசதியும் பழுதடைந்த நிலைக்கு சென்றுள்ளது. எனவே காட்சிப் பொருளாக உள்ள பயணிகள் காத்திருப்பு அறைக்கு மீண்டும் புத்துயிர் ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

நல்ல வரவேற்பு

இதுபற்றி பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணியாற்றி வரும் கடுக்கரையை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

அண்ணா பஸ் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கட்டப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் இது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பஸ் நிலையத்துக்கு வரும் இளைஞர்கள் காத்திருப்பு அறையில் உள்ள இருக்கைகள் மற்றும் தடுப்புகளை சேதப்படுத்தினர். மேலும் அங்கு சில தேவையில்லாத சம்பவமும் நடந்–தன.

ஆனால் கொரோனாவுக்கு பிறகு குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறையில் குளிர்சாதன வசதி செயல்படவில்லை. முறையாக பராமரிக்காததால் இருக்கைகளும் துருப்பிடித்த நிலைக்கு சென்றது. அதுமட்டும் அல்லாது மழை பெய்தால் ஒழுகுகிறது. மேலும் மதுபிரியர்கள் அத்துமீறி உள்ளே சென்று மதுக்குடிக்கிறார்கள். எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுத்து குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். முக்கியமாக அந்த அறையை போலீசாரும் கண்காணிக்க வேண்டும்.

காட்சி பொருளாக...

வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை பற்றி பயணிகளிடம் கேட்டபோது, "குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கு ஏ.சி. வேலை செய்யவே இல்லை. அந்த அறைக்குள் சென்று அமர்வதை விட வெளியே காற்று வாங்கிக் கொண்டு நின்றுவிடலாம். அதலும் பெண்கள் காத்திருப்பு அறையில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து உள்ளது.

அதை சரிசெய்து குளிர்சாதன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அந்த அறை மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்