வ.உ.சி. மைதானத்தில் யோகா நிகழ்ச்சி
யோகா தினத்தையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடந்தது.
யோகா தினத்தையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடந்தது.
யோகா தினம்
சர்வதேச யோகா தினமான நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசன நிகழ்ச்சி நடை பெற்றது.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டரங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் ஆகியோர் கலந்துகொண்டு யோகாவை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர். வயது வித்தியாசமின்றி சுமார் ஆயிரம் பேர் இந்த யோகாசனத்தில் பங்கேற்றனர். பின்னர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கோர்ட்டு
இதேபோல் நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சில் மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கலந்துகொண்டு யோகாவை தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை சாரதா கல்லூரியில் என்.சி.சி. மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள்-ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதேபோல பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அஞ்சல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
ஆற்றுப்பாலத்தில் யோகாசனம்
கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஸ்டஅக் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர். பள்ளி ஆசிரியர்கள் லிங்கேஸ்வரி மற்றும் ஜான்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பள்ளி நிறுவனர் முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் இசக்கி பாண்டியன், யோகா பயிற்சியாளர் கிருபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி மாணவர்கள் அனைவரும் யோகாசனம் செய்தனர். பள்ளி முதல்வர் பிரவின்குமார் யோகாசனம் செய்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், பாதுகாப்பு வழங்கிய காவல் துறையினர் மற்றும் பேரூராட்சி மன்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.