விருத்தாசலம் பகுதியில் நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் கவலை

விருத்தாசலம் பகுதியில் நோய் தாக்குதலால் நெய்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

Update: 2022-11-19 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பயிர்கள் தற்போது நன்கு வளர்ச்சி பெற்று செழித்து வளர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால், விவசாய விலை நிலங்களில் மழைநீர் புகுந்து ஓடியது. இதனால் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் தற்போது மழைநீர் வடிந்ததால், சேதமடைந்த பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நோய் தாக்குதலால் தற்போது பயிர்கள் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பரவாமல் தடுக்க நடவடிக்கை

குறிப்பாக விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரபட்டினம் பகுதியில் சாலை ஓரங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் நோய்கள் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது. ஆங்காங்கே திட்டு திட்டுகளாக பயிர்கள் காய்ந்தும், கருகியும் வருகிறது. நோய்கள் தாக்குதலால் பயிர்கள் பசுமையை இழந்து வாடி போய் உள்ளன. இதை கட்டுப்படுத்த எந்த மருந்துகளை பயன்படுத்துவது என தெரியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட வயல்களில் உள்ள பயிர்களை பரிசோதனை செய்வதோடு, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். மேலும் நோய்கள் மற்ற நிலங்களில் உள்ள நெற்பயிர்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்