4 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 4 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டார்.

Update: 2022-07-09 16:14 GMT

தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 4 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டார்.

தேர்தல் வாக்குப்பதிவு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 19-வது வார்டு, பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் பேளாரஅள்ளி கிராம ஊராட்சியில் காலியாக உள்ள 8-வது வார்டு, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொரப்பூர் கிராம ஊராட்சியில் காலியாக உள்ள 4-வது வார்டு மற்றும் 7-வது வார்டு என மொத்தம் 4 உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்றது.

வாக்குப்பதிவு அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 19-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வாக்குப்பதிவு பைசுஅள்ளி கிராம ஊராட்சிக்குட்பட்ட கெங்குசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

பொதுமக்கள் காலை முதலே வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்றி தேர்தல் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான காரிமங்கலம் வட்டார தேர்தல் பார்வையாளர் மாரிமுத்துராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

77.20 சதவீத வாக்குப்பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவின் முடிவில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 19-வது வார்டில் 77.91 சதவீத வாக்குகள் பதிவானது. பேளாரஅள்ளி கிராம ஊராட்சி 8-வது வார்டில் 75.08 சதவீத வாக்குகளும், மொரப்பூர் கிராம ஊராட்சி 4-வது வார்டில் 71.84 சதவீத வாக்குகளும், 7-வது வார்டில் 74.12 சதவீத வாக்குகளும் பதிவாயின. தேர்தல் நடைபெற்ற 4 வார்டுகளில் மொத்தம் 77.20 சதவீத வாக்குகள் பதிவாகின.

Tags:    

மேலும் செய்திகள்