வாக்காளர்கள் சேர்க்கும் பணியில் அ.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்: எஸ்.பி.சண்முகநாதன்

தூத்துக்குடி தெற்குமாவட்டத்தில் வாக்காளர்கள் சேர்க்கும் பணியில் அ.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று எஸ்.பி.சண்முகநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2022-11-10 18:45 GMT

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம்-2023 தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து புதிய வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாம்களில் அ.தி.மு.க.வினர் பணியாற்றுவது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாக்காளர் பட்டியலில் புதிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதில் அ.தி.மு.க.வினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதன்படி இந்த கூட்டத்தில் பங்கேற்ற நீங்கள் அனைவரும் வருகிற 12, 13-ந் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் கட்டாயமாக கலந்து கொண்டு வாக்களர்பட்டியலை சரிபார்த்து அதிக புதிய இளம் வாக்களர்களை சேர்க்க மும்முரமாக களப்பணியாற்ற வேண்டும். மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினரே உண்மையான அ.தி.மு.கவினர். ஆகையால் எந்த சலசலப்பைக் கண்டும் கழகத்தினர் குழப்பம் அடைய வேண்டாம். நம்மில் இருந்து ஒருவர் கூட துரோகிகளின் ஆசை வார்த்தைக்கு துணைப்போக கூடாது. இந்த பணியை நம்மால் மட்டும் தான் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்புச்சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ரா.சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்