சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி

பர்கூர் அருகே சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

Update: 2022-06-25 16:30 GMT

பர்கூர்:

பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட குட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 49 மாணவ-மாணவிகளும், காரிமங்கலத்தானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 22 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று காரிமங்கலத்தானூர் சத்துணவு ஆயா காமாட்சி விடுமுறையில் சென்றார். இதனால் குட்டூர் பள்ளியில் சமையல் செய்து சத்துணவு ஊழியர் விஜயா 2 பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சத்துணவு பரிமாறினார். இதில் காரிமங்கலத்தானூர் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று சத்துணவின் தரம் குறித்து சோதித்து பார்த்தனர். பின்னர் அவர் கூறுகையில், சம்பவத்தன்று மாணவர்களுக்கு புளி சாதம் வழங்கப்பட்டது. சாதத்தில் புளிப்பு தன்மையால் ஒரு மாணவனுக்கு மட்டும் வாந்தி ஏற்பட்டது. மற்ற மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மற்ற யாரும் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறவில்லை என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்