விழுப்புரம் அருகே பரபரப்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 31 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 31 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-09-22 18:45 GMT


விக்கிரவாண்டி, 

சத்து மாத்திரை

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அடுத்த வெங்கமூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று மதியம் சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அந்த சத்து மாத்திரையை மாணவ-மாணவிகள் பள்ளியிலேயே சாப்பிட்டனர்.

இதையடுத்து சத்து மாத்திரைகளை சாப்பிட்ட வெங்கமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மஞ்சுளா, அர்ச்சனா, காவியா, ராகவி, புவனேஸ்வரி, மகாலட்சுமி உள்ளிட்ட 31 மாணவ, மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் காணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மயக்கமடைந்த 31 மாணவர்களையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் காட்டுத்தீ போல் வெங்கமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பரவியது. இதையறிந்து பதறிய வெங்கமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர், எம்.எல்.ஏ. ஆறுதல்

இதனிடையே மேற்கண்ட சம்பவத்தை அறிந்த கலெக்டர் மோகன், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் வாசுகி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து கல்லூரி முதல்வர் குந்தவி தேவியிடம் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டதோடு, சிகிச்சை பெற்ற மாணவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்