சத்துணவு சாப்பிட்ட 13 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூர் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 13 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.;
அரசு பள்ளி
திருவாரூரை அடுத்த புலிவலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் திருவாரூர், புலிவலம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் மதியம் சத்துணவு வழங்கப்படுவது வழக்கம். நேற்று சமையல் கூடத்தில் சமைத்த சாம்பார் சாதம், அவித்த முட்டை ஆகியவை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
வாந்தி-மயக்கம்
இந்த உணவை சாப்பிட்ட 13 மாணவ-மாணவிகளுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் தேவா, முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்தனர்.
சத்துணவு கூடம் ஆய்வு
ேமலும் பள்ளிக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திருப்பதி அறிவுரையின்படி அலுவலர் கர்ணன் மற்றும் அதிகாரிகள் பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.