போலீஸ் பற்றாக்குறை, காட்சிப்பொருளான போக்குவரத்து சிக்னல்களால் வாகன நெரிசலில் தத்தளிக்கும் தேனி

போலீஸ் பற்றாக்குறை, காட்சிப்பொருளான போக்குவரத்து சிக்னல்களால் தேனி நகரம் வாகன நெரிசலில் தத்தளித்து வருகிறது.

Update: 2023-03-29 20:45 GMT

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்து, தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தேனி மாவட்டம் உதயமானது.

போக்குவரத்து போலீஸ் நிலையம்

மதுரையில் இருந்து தேனியை பிரிப்பதற்கு முன்பே, 1985-ம் ஆண்டு தேனி நகரில் போக்குவரத்து போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில், தேனி நகர் என்பது ஒரு கிராமத்தின் சாயலில் தான் இருந்தது. பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் கிடையாது. வாகன போக்குவரத்தும் குறைவாகவே இருந்தது.

காலப்போக்கில் தேனி நகர் குடியிருப்புகள் விரிவாக்கம் அடைந்தன. வாகனப் போக்குவரத்து பல மடங்கு பெருகிவிட்டது. நகரில் பிரதான சாலைகளில் சில நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தால் கூட, அதன் தாக்கம் அடுத்த சில மணி நேரம் வரை நீடிக்கும். அந்த அளவுக்கு நெரிசல் மிகுந்த நகராக தேனி மாறியுள்ளது.

மேம்படுத்தப்படாத போலீஸ் நிலையம்

தேனி போக்குவரத்து போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள் ஆகின்றன. நகரின் வளர்ச்சி, வாகன பெருக்கம், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு போலீஸ் நிலையம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்றால் இல்லை என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது. போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு என்று தனி கட்டிடம் கூட கிடையாது.

தேனி போலீஸ் நிலைய வளாகத்தில் தற்காலிகமாக போக்குவரத்து போலீஸ் நிலையம் செயல்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி போலீஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்தபோது, நேரு சிலை சிக்னல் அருகில் வாடகை கட்டிடத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் செயல்பட்டது.

தேனி போக்குவரத்து போலீஸ் நிலையம் தொடங்கப்பட்ட போது மொத்த பணியிடம் 16 என ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது வரை இங்கு போலீசார் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. குறைவான ஆட்கள் மட்டுமே இருப்பதால், பணிச்சுமையால் போலீசார் பரிதவிக்கின்றனர். அத்துடன், நகரில் ஏற்படும் நெரிசலை சரிசெய்ய முடியாமலும் போலீசார் திணறி வருகின்றனர்.

போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியே சரியாக இருக்கும் சூழலில், வாகன தணிக்கை, அபராதம் விதிப்பு, விழிப்புணர்வு பணிகள் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டியது இருப்பதால் பணிச்சுமை போலீசாருக்கு அதிகரித்துள்ளது.

காட்சிப்பொருளான சிக்னல்கள்

தேனி நகரில் பழைய பஸ் நிலையம் மட்டும் செயல்பட்ட போதே போக்குவரத்து போலீசாருக்கு பணிச்சுமை அதிகம் இருந்தது. 2013-ம் ஆண்டு இறுதியில் புறவழிச்சாலையில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் பணியாற்ற வேண்டிய இடம் மேலும் அதிகரித்தது.

ஆட்கள் பற்றாக்குறையால் மதுரை சாலையில் ரெயில்வே கேட், புதிய பஸ் நிலையம், அன்னஞ்சி விலக்கு போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் பயன்பாடு இன்றி காட்சிபொருளாக உள்ளன. குறிப்பாக, புதிய பஸ் நிலையத்தில் சிக்னல் திறக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், அதை செயல்படுத்த போலீசார் நியமிக்கப்படவில்லை.

நெரிசல் அதிகரிப்பு

பழைய பஸ் நிலையம், நேரு சிலை சிக்னல், பகவதியம்மன் கோவில் தெரு சந்திப்பு, பங்களாமேடு ரவுண்டானா, அரண்மனைப்புதூர் விலக்கு, அன்னஞ்சி விலக்கு, உழவர் சந்தை சாலை சந்திப்பு அருகில், மதுரை சாலை ரெயில்வே கேட், பெரியகுளம் சாலை ரெயில்வே கேட், புதிய பஸ் நிலையம், பூதிப்புரம் சந்திப்பு, பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தேவைப்படுகின்றனர். நகர்ப்புற பகுதி விரிவாக்கம் அடைவதற்கு ஏற்ப எதிர்காலத்தில் இன்னும் பல இடங்களில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவை உருவாகலாம்.

எனவே அதை எல்லாம் கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீஸ் நிலையத்தை மேம்படுத்தி, கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். இதற்காக அரசுக்கு 5 முறை பரிந்துரை செய்தும் அந்த பரிந்துரைகள் நிலுவையில் கிடக்கின்றன. அரசு இந்த பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தினால் தான் தேனி நகரில் அதிகரித்து வரும் நெரிசலை தவிர்க்கவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதுகாப்பான சூழலில் பள்ளிகளுக்கு சென்று வரவும் ஏதுவாக அமையும்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கூடுதல் போலீசார் தேவை

விஜயன் (விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு, தேனி):- நான் தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக 2003 முதல் 2005-ம் ஆண்டு வரையும், 2008 முதல் 2010-ம் ஆண்டு வரையும் பணியாற்றி இருக்கிறேன். அப்போது போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக டிராபிக் வார்டன்களை நியமித்தோம். அவர்கள் போலீசாருக்கு உதவியாக பணியாற்றினார்கள். அப்போது நகரில் 500-ல் இருந்து 1,000 ஆட்டோக்கள் தான் ஓடின. தற்போது 2,500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. தேனி நகரின் தற்போதைய போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய ரெக்கவரி வேன் ஆயுதப்படை வளாகத்தில் உள்ளது. அவற்றை தேனி போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். தேனியில் கண்ட இடங்களில் மினிபஸ்களை நிறுத்துவதை தவிர்த்து ஒரே இடத்தில் நிறுத்தி செல்லும் வகையில் மினிபஸ்களுக்கான நிறுத்தம் ஏற்பாடு செய்ய வேண்டும். போக்குவரத்து போலீசாரால் மாதம் ஒரு முறை விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். பறக்கும் படை போன்று செயல்பட தனியாக போலீசார் நியமிக்க வேண்டும்.

அரசு முன்வர வேண்டும்

துரைவேணுகோபால் (கல்வியாளர், தேனி):- தேனி நகருக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் காலை, மாலை நேரங்களில் வந்து செல்கின்றன. நெரிசல் மிகுந்த தேனியில் போலீசார் போதிய அளவில் இல்லை. இதனால், மாணவ, மாணவிகள் சாலையை கடக்க சிரமம் அடைகின்றனர். நெரிசலில் பள்ளி வாகனங்களும் சிக்குவதால் சில நேரங்களில் பள்ளிக்கு தாமதமாக செல்லும் சூழல் உருவாகிறது. போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கூடுதல் போலீசாரை நியமித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

2 ஆக பிரிக்கலாம்

ரவிக்குமார் (வக்கீல், தேனி):- தேனி நகர் மட்டுமின்றி வீரபாண்டி வரை சென்று போக்குவரத்து போலீசார் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்து போலீஸ் நிலையத்தை நகர் மற்றும் ஊரகம் என 2 ஆக பிரித்து, 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் செயல்படும் வகையில் மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து பிரிவுக்கு என்று தனியாக துணை சூப்பிரண்டு நியமிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் கூடுதல் எண்ணிக்கையில் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் சில மாதங்களில் நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்