வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர்.

Update: 2022-11-20 18:50 GMT

சென்னை,

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து விலங்குகளை பார்த்து ரசிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த 2 வாரங்களாக விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு போதிய அளவு சுற்றுலா பயணிகள் வராததால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

பார்வையாளர்கள் குவிந்தனர்

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தாம்பரம், பூந்தமல்லி, திருப்போரூர், மாமல்லபுரம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, ஆவடி, புழல், மதுராந்தகம் அச்சரப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர்.

இதனால் வண்டலூர் பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. கடந்த 10 நாட்களாக கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட பூங்கா நேற்று களைகட்டியது. பூங்காவுக்கு வருகை தந்த சிறுவர்கள் பூங்காவில் உள்ள ஒரு வயது மனித குரங்கு குட்டி ஆதித்யா செய்யும் சேட்டைகளை பார்த்து கை தட்டி ரசித்து மகிழ்ந்தனர்.

இதே போல வெள்ளை புலி, யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளை பெற்றோர்களுடன் பார்த்து ரசித்தனர். பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வண்டலூர் பூங்கா பிரமாண்ட பெயர் பலகை முன்பு பூங்காவுக்கு வருகை தந்த அனைவரும் குடும்பம் குடும்பமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்