முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.

Update: 2022-10-28 20:16 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

பெரம்பலூரில் வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி அன்று தி.மு.க. சார்பில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து மறுநாள் (5-ந்தேதி) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு கொடுக்கின்றனர்.

பொதுக்கூட்டம்

பின்னர் மதியம் அவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் பெரம்பலூருக்கு மாலையில் வருகை தந்து, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திறந்தவெளியில் தி.மு.க. சார்பில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இரவில் கூட்டம் முடிந்த பின்னர் அவர் பெரம்பலூர் கட்சி அலுவலகத்தில் தங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய திட்டப்பணிகளை...

இதையடுத்து 5-ந்தேதி காலை 10.30 மணியளவில் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பெரம்பலூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அங்கு சென்றடைகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் வருகையை முன்னிட்டு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பெரம்பலூர் பாலக்கரை-கலெக்டர் அலுவலக செல்லும் சாலையோரத்தில் உள்ள திறந்தவெளி இடத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க.வினருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்