மயிலாடுதுறையில் துலா கட்ட விஸ்வநாதர், திருவிழந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பெரிய கோவில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆகிய 7 விஸ்வநாதர் கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் காவிரி ஆற்றின் தென்கரையில் அகத்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தன. அதனைத்தொடர்ந்து நேற்று குடமுழுக்கு நடந்தது. இதனையொட்டி காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டு கடங்களில் நிரப்பப்பட்டது. தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் கோபுர கலசங்கள் ஆகியவற்றுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்த இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், வேளாகுறிச்சி ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், நகரசபை தலைவர் செல்வராஜ், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலின் குடமுழுக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.