விஷால் சொத்து விவரங்கள் ஐகோர்ட்டில் தாக்கல்

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் தன் சொத்து மற்றும் வங்கி கணக்குகளின் விவரங்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

Update: 2023-09-25 23:51 GMT

சென்னை,

மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்த லைக்கா நிறுவனம், விஷால் தயாரிக்கும் படங்களை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று அவருடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி, தான் தயாரித்த வீரமே வாகை சூடும் திரைப்படத்தை விஷால் வழங்கவில்லை.

இதுகுறித்து லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நடிகர் விஷாலின் சொத்துக்கணக்கையும், வங்கி கணக்குகளின் விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் விஷால் அவற்றை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வந்தார்.

6 வங்கி கணக்குகள்

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஷாலின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருத்து தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷாலின், ஐ.டி.பி.ஐ., ஆக்சிஸ், எச்.டி.எப்.சி., பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு என 6 வங்கிகளின் கணக்கு விவரங்களும், அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அவகாசம்

ஆனால் முழு சொத்து விவரங்களையும் விஷால் தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்