விருதுநகர் ரியல் எஸ்டேட் அதிபரிடம்ரூ.20 லட்சம் மோசடி செய்த 3 பேரை காவலில் எடுத்து விசாரணை:2 பேருக்கு கொரோனா தொற்று

குறைந்த வட்டியில் ரூ2 கோடி கடன் தருவதாக கூறி விருதுநகர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கில் 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2023-04-14 18:45 GMT

ரியல் எஸ்டேட் அதிபர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சிங்கராஜகோட்டை பெரியவீதியை சேர்ந்த குமாரசாமி மகன் விக்னேஷ் (வயது 33). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் 'பேஸ்-புக்'கில் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து விளம்பரம் செய்திருந்தேன். அதை பார்த்துவிட்டு சென்னையை சேர்ந்த சத்தியசீலன் என்பவர் என்னை தொடர்பு கொண்டார். ரியல் எஸ்டேட் தொழிலுக்கு குறைந்த வட்டியில் ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறினார். அதற்கு கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் என்றார். அதை நம்பி கடன் பெறுவதற்காக நான் ரூ.20 லட்சம் தயார் செய்தேன்.

பின்னர் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வைத்து, சத்தியசீலன் அனுப்பிய திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த இளங்கோவன் (58), திருப்பூர் வேலாம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (46), நெருபெரிச்சால் பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற சுந்தரமூர்த்தி (35) ஆகிய 3 பேரிடம் ரூ.20 லட்சத்தை கொடுத்தேன்.ஆனால் பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

காவலில் விசாரணை

அந்த புகாரின் பேரில், சத்தியசீலன், இளங்கோவன், பார்த்திபன், சுந்தர் என்ற சுந்தரமூர்த்தி ஆகிய 4 பேர் மீதும் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான 4 பேர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களில் இளங்கோவன், பார்த்திபன், சுந்தர் ஆகிய 3 பேரும் வேறு ஒரு மோசடி வழக்கில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.

அவர்கள் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த தேனி கோர்ட்டில் குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். பின்னர் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, புதுச்சேரியில் இருந்து 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து வந்து தேனியில் வைத்து விசாரணை நடத்தினர்.

2 பேருக்கு கொரோனா

விசாரணையில், சத்தியசீலன் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டவரின் உண்மையான பெயர் செல்வராஜ் என்றும், அவர் திருப்பூரில் இளங்கோவன் வீட்டுக்கு அருகில் வசித்து வந்ததாகவும் தெரியவந்தது. செல்வராஜ் தலைமையிலான மோசடி கும்பல் இதுபோன்று பலரிடம் மோசடி செய்து இருப்பதாக தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் தேனி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

அவர்களை தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் நேற்று முன்தினம் இரவு அடைத்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பார்த்திபன், சுந்தரமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்